- Get link
- X
- Other Apps
அருள்மிகு வேணுகோபாலசாமி திருக்கோவில், வேங்கடம்பேட்டை
மிகப்பழமை வாய்ந்த இத்திருக்கோவில், கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியின் அருகில் இருக்கும் வேங்கடம்பேட்டை என்ற ஊரில் உள்ளது. இக்கோவில் குறிஞ்சிப்பாடியில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இவ்வூரின் பெயர் காரணம்
கி.பி. 1464 ஆம் ஆண்டு செஞ்சியை ஆண்ட வெங்கடபதி நாயக்கர் என்பவர் தனது சகோதரியின் பெயரில் இவ்வூரை நிர்மாணித்து, வேங்கடம்மாள் பேட்டை என்று பெயர்சூட்டினார். அது பின்னர் நாட்களில் சொல்வழக்கில், வேங்கடம்பேட்டையாக மாறியது.இக்கோவிலின் தல வரலாறு
இலங்கை சென்று சீதையை மீட்ட ராமபிரான், திரும்பி வரும் வழியில் மீண்டும் இந்த இடத்திற்கு வந்தார். அப்போது சீதை பிராட்டி, அனுமன் ஆகியோருடன் ஆதிசேஷன் மீது துயில் கொண்டு அரங்கனைப் போல சேவை சாதித்து, இந்தப் பூமியின் மகத்துவத்தை உலகறியச் செய்தார் என்றும், சடமர்ஷனர் என்ற முனிவர் திருமாலை நோக்கி நெடுநாள் தவமிருந்தார் என்றும் அவருக்கு காட்சி கொடுப்பதற்காக பெருமாள் வேங்கடம் பேட்டை என்ற இவ்விடத்தில் லட்சுமணன் ஆதிசேஷனாக மாறி மெத்தை விரித்து குடை பிடித்து தொண்டுபுரிய, சீதை பிராட்டி திருமகள் வடிவிலேயே பெருமாள் திருவடிகளை வருடியவாறு வீற்றிருக்க, பெருமாளும் சயன கோலத்தை சடமர்ஷனர் முனிவருக்கு காட்டி அருளினார் என்றும் இக்கோவிலின் தலவரலாறு கூறுகிறது. இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள் மூலமும் இக்கோவிலைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.இத்திருத்தலத்தில் மகாவிஷ்ணு, சுமார் 6 அடி உயரத்தில் சங்கு, சக்கரங்களை இரு கரங்களில் தாங்கியபடியும், மற்ற இரு கரங்களும் வேய்குழலை பிடித்து ஊதியபடியும் நின்ற திருக்கோலத்தில் பாமா- ருக்மணி சமேத வேணுகோபாலனாகவும், அமர்ந்த திருக்கோலத்தில் வைகுண்டவாசப் பெருமாளாகவும், சயனத் திருக் கோலத்தில் அனந்தன் மீது துயில் கொண்ட அனந்தசயன ராமனாகவும் காட்சி தருகின்றார்.
இங்கு நின்ற கோலம், அமர்ந்த கோலம், சயனக்கோலம் என்ற மூன்று கோலங்களிலும் பெருமாளை தரிசிக்கலாம். இம்மூன்று திருக்கோலங்களையும் ஒருங்கே வணங்கும் அடியவர்கள் அனைத்துச் செல்வங்களையும் பெறுவதோடு, முக்தியையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
கோவில் அமைப்பு
இந்த ஆலயம் பெரிய மதில்சுவர்களையும், ஏழு நிலை இராஜகோபுரங்களைக் கொண்டு கிழக்கு திசைப்பார்த்து அமைந்துள்ளது. கோவிலின் முன்புறம், சுமார் 50 அடி உயரம் உள்ள 16 கல்தூண்கள் கொண்ட ஊஞ்சல் மண்டபம் உள்ளது. கோபுரங்களில், சிற்பங்கள் கலை நுட்பத்துடன் மிகஅருமையாக செதுக்கப் பட்டுள்ளது.ஏழுநிலை கோபுர வாசலைக் கடந்ததும் எங்கும் இல்லாத அளவுக்கு பத்மாசன நிலையில் அமர்ந்துள்ள அபூர்வமான பெரிய கருடார்வார் சன்னதி உள்ளது. அதனை அடுத்து மகா மண்டபத்திற்குள் வைகுண்டவாசன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. அங்கே வைகுண்டவாசன் ஆதிசேஷன் குடைபிடிக்க அமர்ந்த நிலையில் உள்ளார். இதனை அடுத்து வேணுகோபாலசாமி, பாமா-ருக்மணியுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
இந்த சன்னதிக்குத் தெற்கே செங்கமலவல்லித்தாயார் சன்னதி உள்ளது. இத்தயார் பத்மாசனக்கோலத்தில், இரண்டு கைகளில் தாமரைமலர்களை ஏந்தியும், மற்ற இரண்டு கரங்களில் அபய முத்திரையுடனும் அமர்ந்த கோலத்தில் மிக அழகாகக் காட்சி அளிக்கிறார். வடக்கே ஆண்டாள் சன்னதி உள்ளது. இதன் அருகே 18 அடி நீள பாம்பு படுக்கையின் மீது துயில்கொண்ட நிலையில் சயன ராமர் சிலை உள்ளது. அவரது திருவடியில் சீதாபிராட்டியும், ஆஞ்சநேயரும் வீற்று இருக்கின்றனர். சயன ராமர் சிலை பார்ப்பதற்கு பிரமாண்டமாகவும் அழகாகவும் உள்ளது.
சூரியன் மற்றும் சந்திரன் வழிபடல்
சூரியரும் சந்திரரும் ஒரு சேர வழிபடும் சிறப்பு வாய்ந்த தலமாகும். ஆண்டுதோறும் ஆவணிமாதம் 25 தேதியில் இருந்து தொடர்ந்து ஆறு நாட்கள் காலை 6 மணிக்கு இக்கோவிலின் மூலவரை சூரியன் தன் கதிர்களால் வணங்குகிறார். புரட்டாசி மாதம் பெளர்ணமிக்கு முன்பு மூன்று நாட்கள், பெளர்ணமிக்கு பின்பு மூன்று நாட்கள் இக்கோவிலில் உள்ள செங்கமலவல்லி தாயாரை தன் ஒளிக்க்கதிர்களால் வணங்குகிறார். இவ்வாறு சூரியரும் சந்திரரும் வழிபடுவது சிறப்பு அம்சமாகும்.இவ்வாலயத் திருவிழாக்கள்
பராமரிப்பின்றி இருந்த இத்திருக்கோவிலானது, ஓரளவு சீர்செய்யப்பட்டு 150 ஆண்டுகளுக்குப் பிறகு, சில வருடங்களுக்கு முன்பு பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்வாலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி, தைத் திருநாள், ஸ்ரீராம நவமி, தெலுங்கு புத்தாண்டான யுகாதி பண்டிகை ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.கோவில் திறந்திருக்கும் நேரம்
தினமும் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.![]() |
| கோவில் முன்புறம் |
![]() |
| ஸ்ரீ சயன ராமர் |
- Get link
- X
- Other Apps




Comments
Post a Comment