வீர ஆஞ்சநேயர் மலைக்கோவில், புதுப்பாக்கம்,சென்னை
ஆயிரம் வருடங்கள் பழமையான இந்த வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் சென்னைக்கு அருகில் உள்ள புதுப்பாக்கத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் அமைந்துள்ள மலை, கஜகிரி மலை என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் மூலவர் வீர ஆஞ்சநேயர், இம்மலையின் உச்சியில் அருள்பாலிக்கிறார். இம்மலையில் உள்ள கோவிலை அடைய 108 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
கோவில் அமைப்பு
இங்குள்ள ஆஞ்சநேயர் நின்ற நிலையில் பறப்பதற்கு தயாராக உள்ளது போல தமது வலது திருப்பாதத்தை தரையில் ஊன்றி இடது திருப்பாதத்தை உயர்த்தி தரையில் படாமல் வால் தலைக்கு மேல் தூக்கப் பட்ட நிலையில் அதில் மணியுடனும், நாபிக்கமலத்தில் தாமரையுடனும், கையில் அபய முத்திரையுடன் வடக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த ஆஞ்சநேயர் சாளக்கிராமத்தால் ஆனவர். இவரது சன்னதிக்கு எதிரே, ராமர்-சீதை அவர்களின் சன்னதி அமைந்துள்ளது.
இம்மலை அடிவாரத்தில் விநாயகர் சந்நிதி உள்ளது. அவரை முதலில் வணங்கிவிட்டு, பிறகு அங்குள்ள நவக்கிரகங்களை சுற்றி வணங்கி விட்டு 108 படிகள் ஏறி இக்கோவிலை அடைய வேண்டும். மலைமேல் வாகனங்கள் செல்வதற்கு சாலை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. படி ஏறுவதற்கு முன் அதாவது அதன் அருகில் ஆஞ்சநேயர் மற்றும் கருடாழ்வார் சிலைகள் உள்ளது. இக்கோவிலின் கருவறையை சுற்றிலும் இராமாயணக் காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது.
தல வரலாறு
ராம ராவண யுத்தம் நடைபெற்ற போது லட்சுமணனும், வானரங்களும் ராவணனின் மகன் இந்திரஜித்தால் தாக்கப்பட்டு மூர்ச்சையாகினர். அவர்களை எழுப்பி பழைய நிலைக்கு கொண்டு வர அமிர்த சஞ்சீவினி என்ற மூலிகையை ஆஞ்சநேயர் கொண்டு வருவதற்காக சஞ்சீவி மலையை அடைந்தார். அங்கு சென்ற உடன், மூலிகையை இனம் காண முடியாததால் அவர் சஞ்சீவி மலையையே பெயர்த்துக்கொண்டு பறந்து வந்தார். வரும் வழியில் மாலை வேளையானதால், சந்தியாவந்தனம் செய்வதற்காக இந்த மலையில் இறங்கி சந்தியாவந்தனம் முடித்து விட்டு திரும்பவும் பறந்தார்.
அப்படி ஆஞ்சநேயர் பாதம் பட்ட இத்தலத்தில் முசுகுந்த சக்கரவர்த்திக்காக மகான் வியாசராஜா தீர்த்தான் என்பவர் ஆஞ்சநேயர் சிலையை பிரதிஷ்ட்டை செய்து வழிபாடு நடத்தியதாகவும், பிற்காலத்தில் திருமங்கையாழ்வார் இக்கோவிலைக் கட்டியதாகவும். அதன் பின்னர், செங்கல்வராயன் மற்றும் பல பல்லவ மன்னர்கள் ஆலயத்தில் திருப்பணிகள் செய்ததாகவும் இக்கோவில் தல வரலாறு கூறுகிறது.
வழிபாட்டு முறைகள்
இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் வலம்புரிச்சங்கில் தீர்த்தம் கொடுப்பது தனிச்சிறப்பு ஆகும். அமாவாசை நாட்களில் புது செங்கற்களில் ராம நாமம் எழுதி அதை தலையில் சுமந்து கொண்டு ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டே 108 படிகளையும் ஏறி சென்று அந்த செங்கலை அங்கேயே சமர்ப்பித்து விட்டு ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால், வெகு விரைவில் வீடு வாங்கும் யோகம் கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
இங்குள்ள ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தன்று வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றி வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி திருமணம் கைகூடும், காரியத்தடைகள் நீங்கும். இங்கு நேர்த்திக் கடனுக்காக, மட்டை தேங்காய் காட்டும் பழக்கம் உள்ளது.
செவ்வாய்க்கிழமைகளில் மாலை நேரத்தில், இக்கோவிலின் ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி அதனுடன் அருகம்புல், வெற்றிலை கலந்து கட்டிய மாலை அணிவித்து வழிபட்டால் வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு எதிர்பார்த்து இருப்பவர்களுக்கும் உயர் பதவி கிடைக்கும்.
விழாக்கள்
கஜகிரி மலையை சுற்றி பௌர்ணமி அன்று ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாகவும், அப்பொழுது பக்க்தர்கள் அந்த மலையை சுற்றி வந்து தங்களது வேண்டுதல்களைக் கூறினால் ஆஞ்சநேயர் நிறைவேற்றுவதாகவும் நம்பப்படுகிறது. எனவே, இக்கோவிலில் பௌர்ணமி கிரிவலம் மிகவும் விசேஷமாக உள்ளது. இக்கோவிலில் அனுமன் ஜெயந்தியும், ஸ்ரீ ராம நவமியும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
திறக்கும் நேரம்
இத்திருக்கோவில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

Comments
Post a Comment