- Get link
- X
- Other Apps
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், திருப்பட்டூர்
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பட்டூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தின் வேறு பெயர்கள் திருப்பிடவூர், திருப்படையூர் ஆகியவையாகும். இக்கோவிலின் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் ஆவார். தேவி பிரம்ம சம்பத் கவுரி. இக்கோவிலின் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகும். இது பிரம்மாவால் உருவாக்கப்பட்ட தீர்த்தக் கிணறு ஆகும். இதன் தலவிருட்சம் மகிழமரம்.
இது வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் தவம் செய்த புண்ணிய க்ஷேத்ரம்
ஆகும். திருக்கைலாய ஞான உலா இக்கோவிலில் உள்ள பதினெட்டு கால் மண்டபத்தில்
தான் அரங்கேறியது. காசிக்கு நிகரான, கைலாயத்திற்கு இணையான திருக்கோவில்
ஆகும். அப்பர், சுந்தரர் ஆகியோர் இங்கு வந்து இத்தலத்து இறைவனை வழிபட்டு
பாடல் பாடி உள்ளனர்.
பிரம்மனுக்குக்கு சாப விமோசனம்
ஆதியில், பிரம்மா ஐந்து தலைகளுடன் இருந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு கர்வம் ஏற்பட்டு, சிவனுக்கு நிகரானவன் நான் என கர்வம் கொண்டு கூறினார், இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் பிரம்மாவின் ஒரு தலையை கொய்தார். அவரிடமிருந்த படைப்புத் தொழிலையும் பிடுங்கிக்கொண்டார். தாம் இழந்ததை திரும்பப் பெற, பிரம்மா சிவனிடம் சரணடைந்து மன்னிப்பு கேட்டு சிவ பூஜைகள் செய்து பறிக்கப்பட்ட சக்திகளை திரும்பப்பெற்றார். இங்ஙனம் பிரம்மாவால் வணங்கப்பெற்று, அவர் இழந்ததை மீண்டும் அருளியதால் இக்கோவிலில் உள்ள சிவன் பிரம்மபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
பிரம்மாவுக்கு சாப விமோசனம் தரும் பொழுது சிவபெருமான், "உன் சாபம் போக்கிய இந்த திருவிடத்திற்கு வந்து என்னை வழிபடும் பக்தர்களுக்கு தலைவிதியை நல்ல விதமாக திருத்தி எழுதி நல்வாழ்வு அருள்வாயாக!" என்று கூறினார். அதன்படியே இந்த ஆலயத்திற்கு வந்து யார் ஒருவர் இங்குள்ள சிவனையும், பிரம்மாவையும் வழிபட்டு செல்கிறார்களோ, அவர்களுக்கு தலை எழுத்தைத் திருத்தி அருள்பாலிக்கிறார் பிரம்மா.
கோவில் அமைப்பு
இக்கோவிலானது கி.பி. 14ஆம் நூற்றாண்டில், பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட சிற்பங்கள் நிறைந்த கற்கோவில் ஆகும். ஐந்தெழுத்துக்குரிய நாயகனாகிய, சிவபெருமானை தரிசிக்க ஐந்து நிலைகள் கொண்ட
ராஜ கோபுரத்திற்குள் நுழைந்து செல்லவேண்டும். கோபுர நுழைவாயிலில் இருந்து
ஏழு நிலைகளைக் கடந்து பிரம்மபுரீஸ்வரை தரிசிக்க வேண்டும்.
பிரம்மபுரீஸ்வரை வணங்கிவிட்டு, பிரகாரத்திற்குள் நுழைந்ததும் நான்கு தலைகள், நான்கு திருக்கரங்களில் இரண்டு திருக்கரங்கள் மடியில் வைத்தபடியும், மற்ற இரண்டு கரங்களில் வலது கரத்தில் ஜெப மாலையும், இடது கரத்தில் கமண்டலமும் வைத்துக்கொண்டு அழகிய தாமரை மலரில் அமர்ந்து அருள்பாலிக்கும் பிரமாண்டமான பிரம்மாவின் சிலையை தரிசிக்கலாம்.
குருவாகிய பிரம்மாவையும், தட்சிணாமூர்த்தியையும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நின்று
கொண்டே தரிசிக்கலாம் என்பது இவ்வாலயத்தின் சிறப்பாகும்.
பிரம்மபுரீஸ்வரரையும், பிரம்மாவையும் தரிசித்துவிட்டு வந்தால்,
யோகசூத்திரம் அருளிய பதஞ்சலில் முனிவரின் ஜீவசமாதி உள்ளது. இதனைக்
கடந்தால், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர் கற்சிற்பமும் கொண்ட
சுப்ரமணியர் சன்னதி உள்ளது. இத்தலத்தில் உள்ள தேவி மிகவும் இரக்க குணம்
உடையவள். ஆதலால், பிரம்மாவின் மீது இரக்கம் கொண்டு சிவபெருமானிடம்
பிரம்மாவிற்காக கேட்டு அவர் இழந்ததை திரும்பவும் பெறச்செய்ததால், இந்த
அம்மன் பிரம்ம சம்பத் கவுரி என்று அழைக்கப்படுகிறாள்.
பிரம்ம சம்பத் கவரி அம்மனின் சன்னதியை அடுத்து, பிரம்மா பிரதிஷ்ட்டை செய்து வழிபட்ட, 12 தலங்களின் லிங்கங்களும் தனித்தனி சன்னதிகளில் உள்ளது. இந்த 12 லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்வதற்காக உருவாக்கியதே பிரம்ம தீர்த்தம் ஆகும். பிரகாரத்திலும், கோவிலின் மேற்புறத்திலும் விழுகின்ற மழைநீரானது அப்படியே இந்த தீர்த்தத்தில் சென்று கலக்குமாறு கட்டப்பட்டுள்ளது. பாதாள ஈஸ்வரர், சுத்தரத்னேஸ்வரர், தாயுமானவர், கைலாசநாதர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், லால்குடி சப்தரிஷீஸ்வரர், பழமலைநாதர், பிரம்மபுரீஸ்வரர், திருவண்ணாமலை அண்ணாமலையார், காளத்திநாதர், ஏகாம்பரேஸ்வரர், மண்டூகநாதர் என 12 தலங்களில் உள்ள சிவலிங்கங்களையும் பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டார். இவற்றை தரிசித்தால் 12 தலங்களுக்கு சென்று தரிசித்த புண்ணியத்தை பெறலாம்.
இங்கு இருக்கும் கைலாசநாதர் ஆலயம், முற்கால பல்லவ மன்னர்களின் ஆட்சிக் காலமாகிய 7ஆம் அல்லது 8ஆம் நூற்றாண்டு கட்டப்பட்டது என்று தல வரலாறு கூறுகிறது. இக்கோவில் தேர்வடிவில் அமைந்துள்ளது. இங்குள்ள லிங்கமானது சந்திரகாந்த லிங்கம் என்று அழைக்கிறார்கள். இந்த லிங்கமும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள லிங்கமும் ஒரே மாதிரியானது என்று கூறுகின்றனர். இந்த கைலாசநாதர் சன்னதிக்கு எதிரில் உள்ள நந்தி மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டு, காண்பவர் வியக்கும் வண்ணம் உள்ளது. இந்த சன்னதிக்குப் பிறகு 14ஆம் நூற்றாண்டில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தில்
காலபைரவர் நான்கு திருக்கரங்களுடன் உடுக்கை, பாசம், அங்குசம், அமிர்த கலசம்
ஏந்தி, இடுப்புப் பகுதியில் நாகம் ஒன்று சுற்றி அமிர்தகலசத்தை தாங்கியபடி
காட்சி தருவது போல் மேற்கு நோக்கிய நிலையில் பிறஆலயங்களில் இல்லாதது போல்
காட்சியளிக்கிறார். காலபைரவருக்கு எதிரில் கஜலட்சுமி சன்னதி உள்ளது. பிரகார வலம் வந்து நிறைவு செய்யும் போது நந்தியின் சிலை உள்ளது. அதற்கு அருகில் நவகிரக சன்னதியும் உள்ளது. நந்திக்கு அருகில் உள்ள தூணில் ஸ்ரீ நரசிம்மரின் சிற்பம் உள்ளது.
விழாக்கள்
இக்கோவிலில் 10 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறும். அந்த 10 நாட்களும், பிரம்மாவிற்கு மஞ்சள் காப்பும், சிறப்பு ஆராதனைகளும், சிவ பார்வதி திருக்கல்யாணமும் நடைபெறும், தினம் ஒரு வாகனத்தில் சிவ பார்வதி ஊர்வலம் வருவார்கள். பங்குனி மாதத்தில் ஆண்டு தோறும் தேரோட்டம் நடைபெறும். இங்குள்ள சிவனை, சூரியபகவான் வருடம் தோறும் பங்குனி மாதத்தில் 15, 16, 17
ஆகிய நாட்களில் காலை 6.15 மணி முதல் 6.45 மணி வரை, தன் கதிர்களால் சிவனின்
சன்னதியில் விழுந்து வணங்குவதாக ஐதீகம். குருக்களான பிரம்மா, மகேஸ்வரன், குரு பகவான் ஆகியோர் ஒரே தலத்தில் இருப்பதால் இங்கு குருப் பெயர்ச்சி பரிகார பூஜைகள் மிக விமரிசையாக நடைபெறுகிறது. வியாழக்கிழமை, திங்கட்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய கிழமைகளில் வழிபடுவது சிறப்பு என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இங்கு வந்து வேண்டுவோருக்கு பிரம்மா - கல்வி பலம், அஞ்ஞான பலம், தொழில் பலம், திருமணம், வீடு, மனை, ஆயுள் ஆகியவற்றில் நம் விதியை திருத்தி எழுதி அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறார்.
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment