- Get link
- X
- Other Apps
அருள்மிகு யோக நரசிங்கப்பெருமாள் திருக்கோவில்
அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோவில், மதுரை மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கடை அருகில் உள்ள நரசிகம் என்ற இடத்தில் மதுரைக்கு கிழக்கே 8 கிலோமீட்டர் தூரத்திலும், மதுரை-மேலூர் நெடுஞ்சாலையில் இருந்து வடக்கே 4 கிலோமீட்டர் தொலைவிலும், யானைமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இக்கோவில், கஜகிரி க்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் அமைந்துள்ள யானை மலையானது, யானை படுத்து உறங்குவது போலவே காட்சியளிக்கும். இம்மலையானது, இந்திரனால் பூமிக்கு அனுப்பப்பட்ட யானை என்பது ஐதீகம்.
கோவில் அமைப்பு
இக்கோவில், நரசிம்மர் கோயில்களிலேயே மிகப்பெரிய நரசிம்மர் உருவச்சிலை கொண்ட குடைவரைக் கோவிலாகும். இக்கோவில் 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதாகும். இக்கோவிலின் மூலவர் யோக நரசிம்மர் ஆவார். இவர் மார்பில் மஹாலக்ஷ்மியுடன் மேற்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலின் உள்ள அம்மன் நரசிங்கவல்லித் தாயார் தெற்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். அழகான அல்லி மலர்கள் நிறைந்த சக்கர தீர்த்தம் இக்கோவிலின் தீர்த்தமாகும்.
இக்கோவிலில் கருவறை, மகாமண்டபம், கருட மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவை உள்ளன. யானை மலையே உயர்ந்து நிற்பதால் இக்கோவிலுக்கு கொடிமரம் என்று தனியாக இல்லை. ஆஞ்சநேயர், கருடர், நம்மாழ்வார் போன்றவர்களின் சன்னதிகள் இக்கோவிலில் அமைந்துள்ளது.
தல வரலாறு
ரோமச மஹரிஷி என்றவர் தனக்கு புத்திரபாக்கியம் வேண்டி, நரசிம்மரை நோக்கி தவம் செய்தார். அவர் நரசிம்மரை உக்கர கோலத்தில் காணவேண்டினார். அவரது வேண்டுதலுக்கு இணங்க நரசிம்மர் உக்கிர கோலத்தில் காட்சியளித்தார். நரசிம்மரின் உக்கிரத்தால் உண்டான வெப்பத்தை தேவர்களாலும் முனிவர்களாலும் தாங்க முடியவில்லை. எனவே, அதைத் தணிக்க பிரகலாதனை அழைத்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று பிரகலாதன் இத்தலத்திற்கு வந்தான். அப்படியிருந்தும் நரசிம்மரின் உக்கிரம் முழுவதும் தணியவில்லை. எனவே, உலகைக்கு காக்கும் அம்மையான தாயார் இங்கு வந்ததும் அவரது உக்கரம் தணிந்தது. தாயாரை ஆலிங்கனம் செய்து இங்கு யோக நரசிம்மராகக் காட்சியளித்தார்.
தல சிறப்பு
நரசிம்மர், தேய்பிறை சதுர்த்தி அன்று பிரதோஷ காலத்தில் அவதாரம் எடுத்தார். எனவே, இக்கோவிலில் சிவன் கோவில்களைப் போலவே பிரதோஷம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் நரசிம்மரை வழிபட்டால் எதிரிகளின் தொல்லை ஒழியும். எதிரி பயமின்றி வாழலாம். மரணபயம் நீங்கும். வியாபாரம் பெருகும். கல்வி சிறக்கும். வாழ்க்கைத் தரம் மேம்படும்.
வழிபாட்டு முறைகள்
இங்குள்ள சிங்கவல்லித் தாயாரை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே உள்ள கோபம் நீங்கி ஓற்றுமை அதிகரிக்கும். இங்கு நரசிம்மருக்கு திருமஞ்சனம், வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்கின்றனர். பௌர்ணமியன்று இம்மலையை சுற்றி கிரிவலம் வருவது மிகச் சிறப்பாக கருத்தப்படுகிறது. நரசிம்மர் ஜெயந்தி, பௌர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்கள் இங்கு மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- Get link
- X
- Other Apps



Comments
Post a Comment