இறைவனே இடையனாக வந்த திருத்தலம்

அருள்மிகு  கோவர்தனாம்பிகை உடனுறை அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில், திருஇடைச்சுரம்

அருள்மிகு கோவர்தனாம்பிகை உடனுறை அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருஇடைச்சுரம் (திருவடிசூலம்) என்ற ஊரில் அமைந்துள்ளது. திருஇடைச்சுரம் என்ற பெயர் மருவி தற்பொழுது திருவடிசூலம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் உள்ள இறைவன் திருஇடைச்சுரநாதர், ஞானபுரீஸ்வரர், பசும்பொன்னீசர், புற்றிடன்கொண்ட நாதர் என அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் அம்பிகை கோவர்தனாம்பிகை, இமயக்கொடி நாயகி  ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் தலவிருட்சம் வில்வ மரம் ஆகும். இத்தலத்தின் தீர்த்தம் மதுர தீர்த்தம் ஆகும்.

2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதான திருத்தலம்

இது இராமாயண காலத்திற்கு முற்பட்ட அற்புத திருத்தலம் ஆகும்.  இதன்  பழம்பெருமை,  குலோத்துங்க சோழனின் மூன்று கல்வெட்டுக்களும், விக்கிரம சோழனின் இரண்டு கல்வெட்டுக்களும், விக்கிரமசோழனின் உலாவிலும், கலிங்கத்துப்பரணிலும் தெளிவாக உள்ளது. பல்லவ மன்னர்கள், குலோத்துங்க சோழ வம்சத்தினர், விஜயநகர மன்னர்கள் ஆகியோர் இக்கோவிலில் திருப்பணி செய்து வழிபட்ட அரசர்கள் ஆவர். இத்திருக்கோவில் திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற 27ஆவது திருத்தலமாகும்.  சனற்குமார முனிவர், கௌதம மகரிஷி ஆகியோரும் இக்கோவிலில் வழிபட்டுள்ளனர்.

கோவிலின் அமைப்பு

இக்கோவிலின் இறைவன் சன்னதி மேற்கு நோக்கியும், அம்மன் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. அம்மன் சன்னதியிலுள்ள உள்ள கோவர்தனாம்பிகை, தனது இடது காலை முன்னோக்கி வைத்தவாறு காட்சி தருகிறார். தன்னை நம்பி வரும் பக்கதர்களுக்கு உடனே ஓடி வந்து அருள் புரிவாள் என்பதைக் காட்டும் திருக்கோலத்தில் இவ்வாறு எழுந்தருளியுள்ளாள். 

இத்திருக்கோவிலின் கருவறையானது அகழி அமைப்புடையது. பச்சை மரகதத்தால் ஆன சுயம்பு லிங்கம், தீபாராதனை காட்டும் போது பச்சை நிறமாக தெரியும். மரகத சுயம்பு லிங்கமாக சிவபெருமான் அமைந்திருக்கும் கருவறையின் உட்பிரகாரத்தைச் சுற்றி சௌவுமிய நதி ஓடுவதாக நம்பப்படுகிறது. இதனால், அவ்விடம் எப்பொழுதும் ஈரத்தன்மையுடன் காணப்படுவது, வேறு எந்த கோவிலிலும் காணக்கிடைக்காத அறிய காட்சி ஆகும். இக்கோவிலில் வரசித்தி விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, பைரவர், நவக்கிரகங்கள்,  சண்டிகேஸ்வரர், துர்கை, விஷ்ணு, உற்சவர் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இத்திருத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியின் காலடியில் உள்ள முயலகன் தலை இடது புறமாக அமைந்துள்ளது.

தல வரலாறு

மிகப் பழங்காலத்தில், ருத்ரசதன் என்ற அரசன், சிவன் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தான். அவன் சிவபூஜை செய்வதற்கு முன்பு தினமும் கோ பூஜை செய்வான். அதற்காகவே பசுக்களுக்கு என கோசாலை அமைத்திருந்தான். அதில் தினந்தோறும் ஒரு பசு கோ பூஜைக்கு அழைத்து வரப்படும். இந்நிலையில் சிவபெருமான், ருத்ரசதனை சோதித்துப் பார்க்க விரும்பினார். எனவே, அவ்வூரில் இருந்த அனைத்துப் பசுக்களுக்கும் நோய் தாக்கச் செய்தார். நோய்தாக்கிய பசுக்களை கோ பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது என்பது ஆகம விதி. இதனால் மனதில் மிகுந்த துன்பத்தோடு ருத்ரசதன், சிவபெருமானை பிராத்தனை செய்தான். 

பார்வதி தேவி சிவபெருமானை நோக்கி, ஒரு சிறந்த சிவபக்தன் அன்னம் ஆகாரம் இல்லாமல் கோ பூஜைக்கு பசு கிடைக்காத கவலையில் சிவ நாமத்தையே உச்சரிப்பதைப் பார்த்தும், இறைவன் ஒன்றும் செய்யாததைக் கண்டு ஏன் என வினவினார். இதற்கு சிவபெருமான், எல்லா அருளையும் தேவி மூலமாக அருள்வதாகக் கூறி பூலோகத்திற்கு  பார்வதி தேவி பசுவாகவும், சிவபெருமான் இடையனாகவும் உருமாறி, ருத்ரசதனின் அரண்மனைக்குள் நுழைந்தனர். இடையனை வரவேற்ற ருத்ரசதன், "நீ யார்?" எனக் கேட்க அதற்கு சிவபெருமான், "நான் தான் இந்த ஊரிலேயே பெரிய இடையன். என் பெயர் பச்சையப்பன். என்னிடம் உள்ள பசுக்கள் போல் வேறு யாரிடமும் இல்லை. உங்கள் கோ பூஜைக்கு உயர் ஜாதி பசு ஒன்றை அழைத்து வந்திருக்கிறேன். இப்பசு, இதுவரை எந்த நோய் நொடியும் அண்டாத பசு." என்றார்.

ருத்ரசதன் மனமகிழ்ந்து, அப்பசுவை அரண்மனைப் பசுவாக அறிவித்து, அதற்கு தனி கோசாலை அமைத்து பராமரிக்க ஏற்பாடுகள் செய்தான். இந்த பசுவிற்கு இணையாக உங்களுக்கு என்ன வேண்டும் என்று அரசன் கேட்டான். பச்சை நிறம் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம் என்றான் இடையன் உருவில் வந்த இறைவன். உடனே அரண்மனையில் இருந்த பச்சை மரகத கற்களை எல்லாம்  அள்ளிக் கொடுத்தான் ருத்ரசதன். பின்பு இந்த பசுவைக் கொண்டு தினமும் கோ பூஜை செய்து மகிழ்ந்தான். 

ஒரு நாள் அரண்மனை பசுக்களுடன் சேர்த்து மேய்ச்சலுக்கு அனுப்பப்பட்ட அப்பசு, மாலையானவுடன் மற்ற பசுக்களுடன் வீடு திரும்பாமல் தாமதமாகவே வந்தது. மறுநாளும் இதே போன்று செய்தது. இதை மறைந்திருந்து இடையன் கவனித்தான். மனிதர்களால் நுழைய முடியாத அடர்ந்த வில்வ வனத்திற்குள், முதல் அடி வைத்ததுமே வில்வ மரங்கள் நகர்ந்து அப்பசுவிற்கு வழிவிட்டன. அங்குள்ள சௌமிய நதிக் கரையிலுள்ள புற்றுக்கருகில் சென்று வணங்கி புற்றினுக்குள் பால் பொழிந்து, மணி கட்டிய கழுத்தை அசைத்து அபிஷேகத்திற்கு மணி அடித்துக் கொண்டிருந்தது. 

தொடர்ந்து, தினமும் இவ்வாறே பால் சுரந்த வண்ணம் இருந்தது. இதை ருத்ரசதனுக்கு இடையர்கள் தெரிவித்து, இந்நிகழ்ச்சியைக் காண அவனை அழைத்து வந்தனர்.  ருத்ரசதன் அப்பசுவை பற்றும்படி பணியாட்களுக்கு ஆணையிட்டான். தப்பி ஓடிச் சென்ற பசு பச்சை நிற ஒளியுடன், புற்றினுள் மறைந்தது. இதனைக் கண்ட அரசன் அந்தப் புற்றை இடிக்கும் படி கட்டளையிட, புற்று தானே உடைந்து மரகத சுயம்பு லிங்கம், பசும்பொன் நிறத்தில் ஒளிவீசி உமையும் சிவனுமாக ருத்ரசதனுக்கு காட்சியளித்து, "இந்த வில்வவனம், இனி திருஇடைச்சுரம் என்று அழைக்கப்படும். பச்சை மரகத சுயம்பு லிங்கமாக இங்கேயே இருந்து யாம் அருள் புரிவோம். இவ்விடத்தில் நீ வழிபாடு செய்து திருக்கையிலையை வந்தடைவாயாக", என அருள் புரிந்தார்.

முக்கிய விழாக்கள்

சித்திரா பௌர்ணமி, ஆடிப்பூரம், கார்த்திகை-108 சங்காபிஷேகம், மஹா சிவராத்திரி பெருவிழா, நான்கு கால பெரும் திருமஞ்சனம், திருக்கல்யாணம், ஞானசம்பந்தர் திருநட்சத்திரம், மாதப்பிரதோஷம், அற்புதத் திருமஞ்சனம், உட்பிரகார உலா, ஆராதனை, பாராயணம் ஆகியவை விமரிசையாக நடைபெறும்.

பிரார்த்தனை

மதுர தீர்த்ததில் நீராடி அம்பிகைக்கு நெய் விளக்கேற்றி பிராத்தனை செய்து, ஞானபுரீஸ்வரருக்கு தேனாபிஷேகம் செய்து, அந்த தேனை தினமும் அருந்தி வந்தால், தோல்வியாதிகள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. திருமணத்தடை, வாழ்க்கையில் உள்ள தடைகள், தொழில் தடை மற்றும் கல்வியில் மேன்மை அடையவும், இங்குள்ள இறைவனை வழிபட்டால் அனைத்து தடைகளும் நீங்கி சகல  சௌபாக்கியங்களும் கிட்டும் என கூறப்படுகிறது.

அருள்மிகு  கோவர்தனாம்பிகை உடனுறை அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில், திருஇடைச்சுரம்


Comments