- Get link
- X
- Other Apps
அருள்மிகு அமிர்தவல்லி நாயகி சமேத ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோவில், பூவரசன்குப்பம்
அருள்மிகு அமிர்தவல்லி நாயகி சமேத ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோவில் தமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பூவரசன்குப்பம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் இறைவன் லக்ஷ்மி நரசிம்மர் ஆவார். இக்கோவிலில் பிரகலாதன் உற்சவ மூர்த்தியாக உள்ளார். இங்குள்ள தாயார் அமிர்தவல்லி ஆவர். தலவிருட்சம் நெல்லி மரம். தீர்த்தம் சக்கர தீர்த்தம் ஆகும்.
பெயர்க்காரணம்
நரசிம்மர் இரணியனை அழித்து பிரகலாதனுக்கு காட்சி கொடுத்த தலம், ஆந்திராவில் உள்ள அஹோபிலம் ஆகும். தமிழகத்தில் தவமுனிவர்களுக்கு காட்சி கொடுத்த தலம் பூவரசன்குப்பம் ஆகும். எனவே, இத்தலம் தென் அஹோபிலம் என்று அழைக்கப்படுகிறது.
தல வரலாறு
இறைவன் நரசிம்மர் இரணியனை வதம் புரிந்த பிறகு, கோபம் தணியாமல் அலைந்தார். இரணியனின் கொடுமைக்கு பயந்து காடுகளிலும், மலைகளிலும் ஒளிந்து வாழ்ந்த முனிவர்கள், நரசிம்மரின் தரிசனம் வேண்டி தவம் இருந்தனர். அப்போது முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள - சிங்கிரிக்குடி, அந்திரி, பரிக்கல், சோளிங்கர், நாமக்கல், சிங்கப்பெருமாள் கோவில், சிந்தலவாடி, பூவரசன்குப்பம் ஆகிய 8 திருத்தலங்களில் காட்சி புரிந்து அருள் பாலித்தார்.
கி.பி. 3ஆம் நூற்றாண்டில் நரசிம்மர் தூணில் இருந்து தோன்றியதால் அந்தத் தூணையே நரசிம்மராக வழிபாடு செய்து வந்துள்ளனர். பின்னர் இத்திருக்கோவில் கி.பி ஏழாம் நூற்றாண்டில் முதலாம் நரசிம்மவர்ம பல்லவனால் கற்கோவிலாக கட்டப்பட்டு பிறகு லக்ஷ்மி நரசிம்மருக்கு சிலை செய்யப்பட்டு பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவிலில் அமிர்தவல்லி தாயார்க்கும், ஆண்டாளுக்கும் தனித்தனியே சன்னதிகள் உள்ளன.
இத்தல சிறப்பு
முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அம்மனை தன் மடியில் அமர்த்தி, இடது கரத்தால் அணைத்து, தன் வலது கரத்தால் அபயம் அளித்து சீரிய சிங்கமாக சிரித்த முகத்துடன் காட்சியளிக்கிறார். ஆணுக்குப் பெண் சரி சமம் என்பதற்கு ஏற்ப இங்குள்ள சுவாமியின் திருமேனியும், அம்மன் திருமேனியும் சரிசமமாகக் காணப்படுகிறது. இக்கோவிலில் உள்ள தாயார் அம்மன், அமிர்தத்திற்கு இணையான பலனை கொடுக்க வல்லவள் என்பதால் அமிர்தவல்லித் தாயார் என அழைக்கப்படுகிறாள். இக்கோவிலின் தாயார் ஒரு கண்ணால் நரசிம்மரையும், மறுகண்ணால் பக்தர்களையும் பார்த்து அருள் புரிகின்றாள். இத்திருக்காட்சி இந்த பூவுலகில் வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும்.
பூஜை முறைகள்
இக்கோவிலில் பஞ்சராத்திர ஆகம முறைப்படி, இரண்டுகால பூஜை நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதம் இக்கோவிலின் இறைவனின் நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், அன்னதானங்களும் நடைபெறுகின்றன.
வழிபடும் முறைகள்
இத்திருக்கோவிலில் இயற்கை எழிலோடு வீற்றிருக்கும் லக்ஷ்மி நரசிம்மரை 48 நாட்கள் விரதமிருந்து வழிபட்டால் பதவி உயர்வு பெறுவார், கடன் தொல்லைகள் நீங்கும், பகைவர்களும் நண்பர்களாக மாறிவிடுவார்கள், வசதி வாய்ப்புகள் அதிகரித்து செல்வ செழிப்புடன் வாழ்வர். பக்தர்கள் அவர்களுக்கு ஏற்றபடி நேர்ந்து கொண்டு, தங்களது பிரார்த்தனை நிறைவேறியதும் அபிஷேகம், அன்னதானம், பொருளுதவி ஆகியவை இக்கோவில் இறைவனுக்கு செய்கின்றனர்.
இக்கோவிலின் விசேஷ நாட்கள்
சித்திரை மாத சுவாதி நட்சத்திரம் நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மாதம் ஒருமுறை வரும் சுவாதி நட்சத்திர தினம், புரட்டாசி சனிக்கிழமை மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகியவை விசேஷ நாட்களாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் அன்று கருடசேவை நடைபெறும். தை மாதம் 5ஆம் தேதி தீர்த்தவாரி நடைபெறும்.
| அருள்மிகு அமிர்தவல்லி நாயகி சமேத ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோவில், பூவரசன்குப்பம் |
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment