- Get link
- X
- Other Apps
ஓம் நம சிவாய:
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயம்
கழுகுக் கோயில் என்று அழைக்கப்படும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் இருக்கும் வேதகிரி மலையில் அமைத்துள்ளது. நான்கு வேதங்களும் இங்கு நான்கு சிகரங்களாக அமைந்து, அவற்றின் உச்சியில் இத்தலத்து இறைவன் வீற்றிருப்பதால், இம்மலைக்கு வேதகிரி என்ற பெயர் உருவானது என்று கூறுகின்றனர். சுமார் 500 அடி உயரத்தில் உள்ள இந்த மலைக் கோவிலை அடைய 565 படிகளைக் கடந்து செல்ல வேண்டும். இம்மலைக் கோவிலின் மூலவர் வேதகிரீஸ்வரர், சுயம்புவாக உருவானவர். சிவாலயங்களில் பொதுவாக கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி, இங்கு இல்லை.
இக்கோவிலின் கருவறை கருங்கல் பாறையால் ஆனது. கருவறையின் மேற்பக்க உட்சுவரில் பிரம்மா, திருமால், சோமாஸ்கந்தர் ஆகியோரது சிற்பங்களும், வடக்கு சுவரில் தட்சிணாமூர்த்தியும், மார்க்கண்டேயர் சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் காட்சியும், தெற்குப் பக்க சுவரில் சண்டிகேஸ்வரரும், நந்தியும் உள்ளது. இக்கோவிலின் முதல் பிரகாரத்தில் விநாயகருக்கும், சொக்கநாயகி அம்மனுக்கும் சன்னதி அமைந்துள்ளது. இக்கோவிலின் விமானத்தில் ஒரு சிறிய துவாரம் உள்ளது. இந்த துவாரத்தின் உள்ளே இடி உருவில் சென்று இந்திரன், இறைவனை வழிபட்டு செல்வதாக கூறுகின்றனர். இந்நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழக்கூடியது.
கழுகுப் பாறை
பூசா, விருத்தா என்னும் இரு முனிவர்கள் கழுகு வடிவம் கொண்டு இத்தலத்தில் வழிபடுகின்றனர் என்பது ஐதீகம். இக்கழுகுகள் வழிபடுவதால் தான் இவ்வூர் திருக்கழுக்குன்றம் என்ற பெயர் பெற்றது. இந்த மலைக் கோவிலை அடையும் வழியில் உள்ள பாறையில், இக்கழுகுகள் தினமும் வந்து இறைவனை வணங்கி விட்டு, பிரசாதம் உண்டு விட்டு செல்லும். எனவே, இந்த பாறையை பட்சிப் பாறை என்றும், கழுகுப் பாறை என்றும் அழைக்கின்றனர். பட்சிப் பாறையை விட்டு இறங்கும் வழியில் உள்ள கல் மண்டபம், மகேந்திரவர்ம பல்லவனால் கட்டப்பட்டது என கல்வெட்டுக்கள் கூறுகிறது.மலையின் சிறப்பு
இந்த வேதகிரி மலையில் பல அரிய நோய் நீக்கும் மூலிகைகள் இருப்பதால், அவற்றில் இருந்து வீசும் மூலிகை காற்றானது, இம்மலையை வலம் வருபவர்களுடைய நோயை நீக்குகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் சிறப்புற்று விளங்கும் ஒப்பற்ற தலம் ஆகும். இம்மலையில் கோரக்க சித்தர் உட்பட, ஒன்பது சித்தர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.சங்கு தீர்த்தம்
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வலம்புரி சங்கு இவ்வாலாயத்தின், சங்கு தீர்த்தத்தில் தோன்றுகிறது. கடலில் மட்டுமே உருவாகும் இவ்வகை சங்கு இங்கே கிடைப்பது அபூர்வமான ஒன்று ஆகும். இதுவரை சிறிதும் பெரிதுமான பல வலம்புரி சங்குகள் தோன்றியுள்ளன, அவை அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சங்கு தோன்றுவதற்கு அறிகுறியாக, இக்குளத்தில் நுரை தோன்றி, மறுநாள் ஓங்கார சப்தத்துடன் சங்கு நீரில் மிதக்கும்.இங்குள்ள சங்கு தீர்த்தத்தின் அருகில் தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. சங்கு தீர்த்தத்தின் கிழக்கே ஆஞ்சநேயர் சன்னதியும், மேற்குப் பக்கம் இரட்டைப் பிள்ளையார் சன்னதியும் உள்ளது. சங்கு தீர்த்தத்தின் தென்கிழக்கே உருத்திரக் கோடி கோவில் உள்ளது. சன்னதி வீதியில், ஏழு கன்னியர் உள்ள செல்லியம்மன் கோவிலும், ஓசூரம்மன் கோவிலும் உள்ளது.
பக்தவச்சலேஸ்வரர் ஆலயம்
இம்மலையின் அடிவாரத்தில் உள்ள கோவிலின் மூலவர் பக்தவச்சலேஸ்வரர் ஆவர். தாயார் திரிபுரசுந்தரி அம்மன். இக்கோவிலின் தல விருட்சம் வாழை மரம். தீர்த்தம், சங்கு தீர்த்தம் ஆகும். இக்கோவில் சரகுரு மன்னரால் கட்டப்பட்டது. இக்கோவிலின் நான்கு பக்கமும் நான்கு கோபுரங்கள் உள்ளன. இக்கோவில் வளாகத்தின் உள்ளே சூரியன், சந்திரன், நந்திகேஸ்வரர், உருத்திர கோடீஸ்வரர், உருத்திர கோடீஸ்வரி ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் நந்தி தீர்த்தம், சர்வ வாத்திய மண்டபம், 4 கால் மண்டபம், 16 கால் மண்டபம் ஆகியவை உள்ளன. இக்கோவிலின் வாயிலில் உள்ள ரிஷி கோபுரதத்தில் அழகிய சிற்பங்கள் நிறைந்துள்ளது.ஆலய அமைப்பு
ஆலயத்தின் உட்பிரகாரத்தில் முதலில் காணப்படும் சன்னதி, பக்தவச்சலேஸ்வரர் சன்னதி. இந்த சன்னதியை சுற்றி சூரியன், 63 நாயன்மார்கள், உற்சவர்கள், தட்சிணாமூர்த்தி, துர்கை, பைரவர் ஆகியோரது சிலைகள் உள்ளது. கொடிமரத்திற்கு வடக்கே மிகப்பெரிய வீரபத்திரர் சிலை உள்ளது. பக்தவச்சலேஸ்வரர் சன்னதிக்கு தெற்கே, சோமாஸ்கந்தர் சன்னதி ,ஏகாம்பரநாதர் சன்னதி, மாணிக்கவாசகர் சன்னதி, ஆத்மநாதர் சன்னதி ஆகியவை உள்ளது. பக்தவச்சலேஸ்வரர் சன்னதியின் பின்புறம் தல விநாயகரான வண்டு வன விநாயகர், ஜம்புலிங்கேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர், அருணாச்சலேஸ்வரர், திரிபுர சுந்தரி சன்னதி அமைந்துள்ளது.
திரிபுரசுந்தரி அம்மன் சன்னதி எதிரில் வேதகிரீஷர், காளத்திநாதர், நடராஜர் சன்னதிகள் அமைந்துள்ளன. இக்கோவிலை நாம் வலம் வரும் போது,
நிலம் - ஏகாம்பரநாதர்,
நீர் - ஜம்புகேஸ்வரர்,
நெருப்பு - அருணாச்சலேஸ்வரர்,
காற்று - காளத்திநாதர்,
ஆகாயம் - நடராஜர்
ஆகிய பஞ்சபூதத தலங்களை வணங்கும் பேறு பெறுகிறோம். நடராஜர் சன்னதி, அழகிய கருங்கல் தூண்களால் ஆன மண்டபம் ஆகும். இத்தூணில் பெரிய துர்கை அம்மன் உருவமும், அதற்கு, எதிர் தூணின் அடியில் சரகுரு மன்னன் உருவமும் உள்ளது. மற்ற தூண்களில் சரகுரு மன்னன் வேட்டையாடுதல் காட்சியும் மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு
சுமார் 1600 வருடங்களுக்கு முன்பு ஆண்ட, இரண்டாம் கந்த வர்மன் இக்கோவிலை மண்ணாலும் மரத்தாலும் கட்டியுள்ளான், பின்பு சோழர் காலத்தில் சிறிது சிறிதாக வளர்ந்துள்ளது. விஜயநகர அரசர்களின் கல்வெட்டுக்களில், இக்கோவிலின் இறைவன் பெயர் திருக்கழுக்குன்றமுடைய நாயனார் என குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் நரசிம்மவர்மன், ஸ்ரீமலை மேல் மூலஸ்தானத்து பெருமானடிகள் என்று கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில், திருமலை மேலுடையவர் என்றும், முதலாம் ராஜேந்திரன் காலத்தில் ஸ்ரீமூலஸ்தானத்து தேசவிடங்க தேவர் என்றும், ஸ்ரீ வீரபொக்கான் உடையார் எனும் விஜயநகர அரசர், தேசவிடங்கப் பெருமான் எனவும் பெயரிட்டு அழைத்தனர். தேசவிடங்கர் என்பது அழகிய ஜோதியை உடைய, உளியால் செதுக்கப்படாமல், இயற்கையாய் அமைந்த சுயம்பு லிங்கம் என்பது ஆகும்.
ராஜராஜன், முதலாம் இராஜேந்திரன், இரண்டாம் ராஜேந்திரன், ராஜா நாராயண சப்புவாரான் போன்ற பல அரசர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. சாத்தன் மஹிபாலன் என்னும் அரசன் இதனை கற்கோவிலாக கட்டியவர் ஆவார். இக்கோவிலின் முன் மண்டபத்தை காத்தவராயன் என்பவர் கி.பி 1388 ஆம் ஆண்டு கட்டி உள்ளதாக கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
தல சிறப்பு
நான்கு வேதங்கள், உருத்திரக்கோடியர், நந்தி தேவர், திருமால், பிரம்மா, சூரியன், கழுகு முனிவர்கள், இந்திரன் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டு, பாவ விமோசனனம் அடைந்துள்ளனர். இம்மலையை சுற்றி புண்ணியம் ஒன்று செய்தால் போதும், அது கோடியாய் பெருகும் என்கிறார்கள். இத்தலத்தில் உருத்திரகோடி என ஒரு முறை மகிழ்ச்சியுடன் கூறினால் போதும் அது நூறு கோடி முறை ஐந்தெழுத்தை (நம சிவாய) கூறியதற்கு சமம். மாணிக்கவாசகர், சுந்தரர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், பட்டினத்தார், அருணகிரிநாதர், திருப்போரூர் சுவாமிகள் ஆகியோர் இத்தலத்து இறைவனைப் பற்றியும், இத்தலத்தைப் பற்றியும் பதிகம் பாடியுள்ளனர். அந்திகவி வீரராகவ முதலியார் இயற்றிய கலம்பகம், உலா, பெரிய புராணம், நாலாயிர திவ்யபிரபந்தம், வாதவூரார் புராணம் ஆகியவற்றிலும் இக்கோவில் இறைவனைப் பற்றி புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது.தல தீர்த்தங்கள்
இக்கோவிலில் பன்னிரெண்டு தீர்த்தங்கள் உள்ளது. வேதகிரியின் கீழ்த் திசையில் இந்திர தீர்த்தமும், தென் கிழக்கில் சம்பு தீர்த்தமும், உருத்திர தீர்த்தமும் உள்ளது, வடக்கே வசிட்ட தீர்த்தமும், தென் மேற்கே மெய்ஞான தீர்த்தமும், அகத்திய தீர்த்தமும், மார்க்கண்டேய தீர்த்தமும், கோசிக தீர்த்தமும் உள்ளன. வடமேற்கு திசையில், அகலிகை தீர்த்தமும். இதைத் தவிர வருண தீர்த்தம், நந்தி தீர்த்தம் மற்றும் பட்சி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இந்த தீர்த்தத்தில் நீராடினாலோ, நீரை தலையில் அள்ளி தெளித்தாலோ பாவம் நீங்கும் எனவும், அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டாகும் என கூறப்படுகிறது.
இங்கு பிரதோஷம் மற்றும்
சிவராத்திரி மிகவும் சிறப்பாக நடைபெறும். வேதகிரி, சிவபுரம், தென்கயிலை என
புகழ்ந்து பாடப்பெற்றும், சைவ சமய குறவர்களால் பைந்தமிழ் பாக்களால் பாடி
பரவசம் அடைந்ததுமான வேதகிரீஸ்வரர் ஆலயத்தில் பன்னிரெண்டு ஆண்டுக்கு
ஒருமுறை சங்கு தீர்த்த புஷ்கர மேளா, இலட்ச தீப பெருவிழா வெகு விமர்சையாக
நடக்கும். வேதகிரீஷருக்கு சித்திரை திங்கள் பெருவிழா ஏழு
நாட்கள் நடத்தப்படுகிறது. இந்த ஏழு நாள் திருவிழாவிலும், விநாயகர்,
வேதகிரீஷர், திரிபுரசுந்தரி, முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி
தேர்களில் வலம் வந்து, மக்களுக்கு அருள்பாலிக்கும் காட்சி எங்கும்
காணமுடியாத ஒரு அரிய காட்சியாகும்.
திரிபுரசுந்தரிக்கு ஆடிப்பூர திருவிழா நடைபெறும். திரிபுரசுந்தரி அம்மனுக்கு, ஆடி மற்றும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில், புரட்டாசி மாதத்தில் சரஸ்வதி பூஜை அன்றும் முழு அபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் எல்லாம் பாதம் மட்டும் அபிஷேகம் செய்யப்படும். இந்த அம்மன் சிலையானது 8 விதமான வாசனை திரவியங்களினால் செய்யப்பட்டது.
வழிபாட்டு முறை
இக்கோவிலில் சங்கு தரிசனம் செய்தால், பாவ விமோசனம் பெறலாம் என்றும், பௌர்ணமி அன்று கிரிவலம் வந்தால் பிணிகள் நீங்கி ஆரோக்ய வாழ்வை பெறலாம் என்றும் நம்பப்படுகிறது.திருவிழாக்கள்
திரிபுரசுந்தரிக்கு ஆடிப்பூர திருவிழா நடைபெறும். திரிபுரசுந்தரி அம்மனுக்கு, ஆடி மற்றும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில், புரட்டாசி மாதத்தில் சரஸ்வதி பூஜை அன்றும் முழு அபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் எல்லாம் பாதம் மட்டும் அபிஷேகம் செய்யப்படும். இந்த அம்மன் சிலையானது 8 விதமான வாசனை திரவியங்களினால் செய்யப்பட்டது.
![]() |
| அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் ஆலயம் |
வாழ்க வளமுடன்
- Get link
- X
- Other Apps



Comments
Post a Comment