நவகிரகங்கள் இல்லாத முதல் சிவாலயம்

ஓம் நம சிவாய:

உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி திருக்கோவில்

உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி திருக்கோவில், தமிழ்நாட்டில் உள்ள இராமநாதபுர மாவட்டத்தின் உத்திரகோசமங்கை என்ற ஊராட்சியில் உள்ளது. இக்கோவிலின் மூலவர் மங்களநாதர். அம்பிகை மங்களாம்பிகை. தலவிருட்சம் இலந்தை மரம். தீர்த்தம் அக்னி தீர்த்தம்.

தலச்சிறப்பு

இக்கோவில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முதல் சிவாலயம் என்று கூறப்படுகிறது. மேலும் இக்கோவிலை நான்கு யுகங்களுக்கு முன்பு தோன்றியது என்றும், இராமாயண காலத்திற்கு (இராமாயணம் நடந்து சுமார் 5000 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது) முற்பட்டது என்றும் கூறப்படுகிறது. உலகில் முதன் முதலில் மரகதத்தால் ஆன நடராஜர் தோன்றிய சிவாலயம் என்றும் கூறுவர். இக்கோவிலில் பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இக்கோவிலில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலந்தை மரம் இன்றும் பூத்துக் குலுங்குகிறது என்பது மிகவும் ஆச்சர்யப்படத்தக்கது.

நடராஜர் பார்வதிக்காக, இங்கே அறையில் ஆடிய நடனத்தை சிதம்பரத்தில் அரங்கத்தில்  ஆடினார் என்கிறார்கள். இதனால் இத்தலத்தை, ஆதி சிதம்பரம் என்று கூறுவர். இத்தலத்தில் தான் நடராஜரால், ஆடல் கலை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்பே உருவான கோவில் என்பதால் நவகிரகங்களுக்கு என்று சன்னதி இங்கு இல்லை.

உத்திரம் என்றால் உபதேசம், கோசம் என்றால் இரகசியம், மங்கை என்றால் பெண் என்றும் பொருள். சிவபெருமான் பார்வதி தேவிக்கு வேத ஆகமங்களின் ரகசியத்தை உபதேசித்த தலம், என்பதால் இத்தலம் உத்திரகோசமங்கை என்று அழைக்கப்பட்டது. இத்தலத்தில் உள்ள அம்பாள், இத்தலத்து இறைவனை பூஜிப்பதாக ஐதீகம்.

இத்தலம், முன்பு சிவபுரம், சதுர்வேதி மங்கலம், தட்சிண  கைலாயம், மங்களபுரி, இலந்திகைப் பள்ளி (இலந்தை வனம்), பிரம்மபுரம் போன்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டது.

இராவணனின் மனைவி, மண்டோதரி சிறந்த சிவபக்தனான ஒருவனைத்தான், தான் மணம் முடிக்க வேண்டும் என்று, இத்தலத்து இறைவனை வழிபட்டு, சிறந்த சிவபக்தனான இராவணனை, இக்கோவில் மங்களநாதர் சன்னதியில் கரம் பிடித்தாள் என்றும், மங்களநாதரே முன்னின்று மண்டோதரி, இராவணன் திருமணத்தை நடத்தி வைத்தார் என்றும் நம்பப்படுகிறது. மண்டோதரியின் பெயர் இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. சிவபெருமான், சிறந்த சிவபக்தனான பக்தனான இராவணனுக்காக   குழந்தையாக மாறி அவன் உடலில் தவழ்ந்தார்.

மாணிக்கவாசகருக்கு உருவக்காட்சி தந்த சிறப்புடைய தலமாகும். இத்தலத்தில் உலகில் உள்ள அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், மஹாபாரதம் எழுதிய வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், அருணகிரிநாதர், காரைக்கால் அம்மையார் ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.

ஆயிரம் சிவனடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்ரலிங்கம் உருவாக்கிய ஒரே ஆலயம் என்ற சிறப்புக்குரியது. 60 ஆயிரம் சிவனடியார்கள் உபதேசம் பெற்ற  ஒரே திருக்கோவில் இக்கோவிலாகும். 'அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற பதி' என்றும், மண்டோதரிக்கு காட்சி கொடுத்தலால் 'காட்சி கொடுத்த நாயகன்' என்றும், 'இலந்தை மரத்தடியில் அமர்ந்த மங்கை பெருமான்' என்றும் இக்கோவிலின் இறைவன் அழைக்கப்படுகிறார்.

இக்கோவில் பிரகாரங்களில், மாணிக்கவாசகரின் திருவாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள  ஐந்தரை அடி உயரம் கொண்ட நடராஜர் பச்சை மரகதக் கல்லால் ஆனவர். சிறிய அதிர்வுகளால் கூட மரகத்தைக் கல் உடையும் தன்மை பெற்றுள்ளதால் இந்த நடராஜர் மேல் எப்பொழுதும் சந்தனக்காப்பு சாத்தப்பட்டு இருக்கும். ஆண்டுக்கு ஒரு முறை, திருவாதிரை நட்சத்திரத்தன்று அந்த சந்தனம் களையப்பட்டு, அபிஷேகம் நடைபெறும், பின்பு மறுபடியும் சந்தனக்காப்பு சாத்தப்படும். நடராஜர் மேல் இருந்து களையப்பட்ட  சந்தனமானது அதிக சக்தி கொண்டதாவும், பக்தர்களின் நோய்கள் நீக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இக்கோவிலின் நடராஜர் சன்னதி, அகழி அமைப்பைக் கொண்டது.

சிவபெருமானுக்கு, இக்கோவில் தவிர வேறு எந்த சிவாலயங்களிலும், தாழம்பூ சாற்றுவது இல்லை. தாழம்பூவுக்கு, இங்கு சாப விமோச்சனம் கிடைத்ததால் இங்கு மட்டும் தாழம்பூ சாற்றப்படுகிறது.

இக்கோவில் அமைப்பு

இத்தலத்தில் மங்களநாதர் சன்னதி, மங்களாம்பிகை  சன்னதி, சகஸ்ரலிங்க சன்னதி, நடராஜர் சன்னதி ஆகிய நான்கு சன்னதிகளும் ஒவ்வொன்றும் தனித்தனியே கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடிமரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. நடராஜரை தொழுதுவிட்டு, முன் மண்டபம் வந்தால், ஸ்படிக லிங்கம், மரகத லிங்கம் ஆகியவை  இருக்கிறது. இந்த ஸ்படிக, மரகத லிங்கங்களுக்கு வலப்பக்கத்தில், மாணிக்கவாசகரையும், இடப்பக்கத்தில் உமாமகேஸ்வரரையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம். மங்களநாதர் சன்னதிக்கு சென்றுவிட்டு, முன்புறம் வந்தால் படிக்கட்டுகள் இருக்கும். அது வழியே பிரகார வலம் வரலாம். அங்கு, சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு குருவாக உபதேசம் செய்யும் காட்சி மற்றும் பிரகார சுவற்றில் திருப்பதிகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

இக்கோவிலின் தீர்த்தமான, அக்னி தீர்த்தம் மற்றும் மங்கள தீர்த்தம் ஆகியவை கோவிலின்  உள்ளே உள்ளது. கோவிலுக்கு வெளியே, பிரம்ம தீர்த்தமும், சற்று தள்ளி வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம் ஆகியவை உள்ளன.

நடராஜர் பெருமானுக்கு தெற்கு நோக்கிய தனி சன்னதி உள்ளது. சன்னதிக்கு உள்ளே செல்ல, மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடராஜர் உலா வருவது இல்லை. கோவிலின் உள்  வாயிலைத் தாண்டி,  பெரிய மண்டபத்தை அடைந்தால், இராமநாதபுர சேதுபதியின் சிலைகள் தூணில் காணப்படுகின்றன. 

பக்கத்தில், சகஸ்ர லிங்க சன்னதி உள்ளது. அதன் உட்புறத்தில் தலவிருட்சத்தின் வேர் உள்ளது. கைகூட நுழையாத இடத்தில் சிறிய யானை சிற்பம் பார்த்ததற்கு மிகவும் அற்புதமாக உள்ளது. நுழைவாயிலில் இரண்டு யாழிகள் அதன் வாயில் பந்து  வைத்துக்கொண்டு மிகவும் எழிலாக நிற்கின்றன. எழில்மிகு கோபுரங்களும், அற்புதமான சிலைகளும் வேலைப்பாடுகளுடனும் காணப்படுகின்றன.

பிரார்த்தனை

இத்தலத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் தாழம்பூ சார்த்தி வழிபட்டால், திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்றும், அனைத்து விதமான சாபங்களும் நீங்கி வாழ்வில் நலம் பெறுவர் என்றும் கூறப்படுகிறது. இக்கோவிலை வலம்  வந்தால், அனைத்து விதமான சித்திகளும் பெறுவர் என்று கூறுகிறார்கள்.

உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி திருக்கோவில்

வாழ்க வளமுடன்

Comments