நோய் தீர்க்கும் சிவன் கோவில்

ஓம் நம சிவாய: 

அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில், திருவதிகை 

இத்திருக்கோவில், கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு மிக அருகில் உள்ள திருவதிகையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் வீரட்டானேஸ்வரர் ஆவார். தாயார் பெரியநாயகி. சரக்கொன்றை மரம் இக்கோவிலின் தலவிருட்சம் ஆகும்.

தலச்சிறப்பு 

சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு வீரட்டதலங்களுள், இது மிக முக்கியமான தலமாகும். இத்தலத்தில் தான் சிவபெருமான், தன் அழகான சிரிப்பினாலேயே, ஒரே நொடியில் திரிபுர சம்ஹாரம் புரிந்தார். திருவதிகை கோவிலின் நிழல் தரையில் படாத படி, கணித சாஸ்திரத்துடன், பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன், இக்கோவிலின் விமான அமைப்பைக் கண்டு பிரமிப்படைந்து, இதன் அமைப்பை ஒட்டியே பெரிய கோவிலைக் கட்டியதாகக் கூறுகிறார்கள்.

இத்தலம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இத்தலத்தில் உள்ள மூலவர் வீரட்டானேஸ்வரர் 16 பட்டைகள் தாங்கி, சுமார் 7 அடி உயரத்தில், காண்பவர்கள் பிரமிக்கும் வண்ணம், சுயம்பு லிங்கமாகக் காட்சி அளிக்கிறார். சந்திரனுக்கு உள்ள 16 கலைகளை பிரதிபலிப்பதால் சந்திரனுக்கு உரிய அம்சத்துடன் இம்மூலவர் திகழ்வதாகக் கூறுகின்றனர். எனவே, மூலவரை சோடலிங்கம் என்கிறார்கள். இந்திரன், பிரம்மா, திருமால், வாயு, வருணன், எமன் முதலானோர் இந்த ஈசனை வழிபட்டுள்ளனர். சந்திரனுக்கு என்று தனி சன்னதி இக்கோவிலில் இல்லை. 
மூலவர் வீரட்டானேஸ்வரர் இருக்கும் கருவறை, வெயில் காலத்திலும் குளிர்ச்சியாகவே இருக்குமாம். சந்திரனுக்குரிய சந்திர காந்தக் கல்லுக்கு மட்டுமே வெயில் காலத்திலும் குளிர்ச்சியை கொடுக்கும் தன்மை உண்டு. எனவே, இத்தலத்து மூலவர் லிங்கம், சந்திர காந்தக் கல்லால் அமைக்கப்பட்டு இருக்கலாம், என கூறப்படுகிறது. மூலவர் மீது 13 ஆயிரம் ருத்ராட்சங்கள் கொண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு பின்பக்க சுவரில், மிகப் பெரிய உமாமகேஸ்வரர் சிலைகள் உள்ளன. இந்த அமைப்பானது சிவன் தன்னைத் தானே வழிபடுகின்றார்  என்கிறார்கள். இது தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் இல்லாத அமைப்பாகும். இந்த ஆலயத்தின் தூண்கள் எல்லாம் 16 பட்டைகளுடன் காணப்படுகிறது. இக்கோவில் தேவாரப்பாடல் பெற்றத் தலம் ஆகும். இக்கோவிலின் வாயில் உள்ளே நுழையும் இடத்தில், 108 கரண நடன சிற்பங்கள் உள்ளது.

கோவிலின் அமைப்பு

இத்தலம் 5 பிரகாரங்களைக் கொண்டுள்ளது. முதல் பிரகாரம் - கருவறை. இது வெளிப்பக்கச் சுவரை ஒட்டி அமைந்துள்ளது. இரண்டாவது பிரகாரத்தில் 20க்கும் மேற்பட்ட உப சன்னதிகள் அமைந்துள்ளன. மூன்றாவது பிரகாரத்தில் கொடிமரம், பலிபீடம், 100 கால் மண்டபம், நந்தவனம் போன்றவை உள்ளன. இதை அடுத்து நான்காவது பிரகாரம் உள்ளது. மாடவீதி, ஐந்தாவது பிரகாரமாகக் கருதப்படுகிறது. இக்கோவிலின் ராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டுள்ளது. இந்த கோபுரத்தின் முன்பு 16 கால் மண்டபம் உள்ளது. இது திருநீற்று மண்டபம் என அழைக்கப்படுகிறது.

இரண்டாவது கோபுரத்திற்கு முன் கொடிமரத்தின் அருகில் விநாயகரும், வராஹியும் உள்ளனர். இரண்டாவது கோபுரத்தை கடந்து சென்றால் உட்பிரகாரத்தை அடையலாம். உட்பிரகாரத்தில் இடது புறம் விநாயகரும், அருகில் பெரிய நந்தியும் உள்ளது. இதை வழிபட்டு இடதுபுறம் சென்றால் படிக்கட்டுகள் வழியாக மகாமண்டபத்தை அடையலாம். உட்பிரகாரத்தில் தென் திசையில் இக்கோவிலின் தலவிருட்சமான, சரக்கொன்றை மரம் உள்ளது. மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகிய இரண்டையும் கடந்து சென்றால், கருவறையை அடையலாம். 

இக்கோவிலின் மூலவர் பெரிய லிங்க வடிவில் 16 பட்டைகளுடன் எழுந்தருளி இருக்கிறார். உட்பிரகாரத்தில் ஈசனுக்கு வலது புறம் அம்மன் சன்னதி அமைந்துள்ளது. பெரியநாயகி அம்மன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இக்கோவிலில் மட்டும் தான் அம்மன் சன்னதி ஈசனுக்கு வலது பக்கம் உள்ளது. இது திருமணக் கோலம் என்றும் அழைக்கப்படுகிறது. உட்பிரகாரத்தின் பின் பகுதியில், விநாயகர் சந்நிதியும், அதை அடுத்து பல்வேறு வகையான 22 லிங்க உருவங்களும் அமைந்துள்ளன. இந்த வரிசையில், முதலில் உள்ளது இறைவனின் லிங்க வடிவத்தில் நான்கு முகங்களும், லிங்கத்தின் உச்சந்தலை பகுதியில் ஐந்தாவது முகமும் பெற்று பஞ்சமுக லிங்கமாகக் காட்சி அளிக்கிறார். 

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது, மோகினி வடிவெடுத்த பெருமாள், அதன் பின் இத்தல சிவலிங்கத்தை வழிபட்டார். அது விஷ்ணு லிங்கம் என்று அழைக்கப் படுகிறது. மஹாபாரத காலத்தில் அஸ்வத்தாமன் இறந்தான், என்று பொய் கூறியதற்காக பாவம் நீங்க இத்தல லிங்கத்தை தருமர் வழிபட்டார். அது தரும லிங்கம் எனப்படுகிறது. உட்பிரகாரத்தில் வடக்கு மூலையில் முருகன் சன்னதியும், அதன் அருகில் காசி விஸ்வநாதர் சன்னதியும், கஜலட்சுமி சன்னதியும் உள்ளது. இக்கோவிலின் கருவறையின் மேல் அமைந்துள்ள கோபுரமானது மிகவும் உயரமாகவும், காண்பதற்கு தேர் போன்றும் அமைந்துள்ளது.

கோபுரத்தின் சுற்றுசுவர்களில், அழகான வேலைப்பாடுகளால் ஆன சிற்பங்கள் உள்ளது. கோவிலின் உட்சுற்று பிரகாரத்தில், திருநாவுக்கரசருக்கு 2 சன்னதிகளும், அவரது தமக்கை திலகவதியாருக்கு ஒரு சன்னதியும் உள்ளது. திலகவாதியாரின் சன்னதிக்கு அருகில் சனீஸ்வரரும், துர்க்கையும் எழுந்தருளி உள்ளனர். மூலவர் இருக்கும் சன்னதியின் வெளிப்புற சுவற்றின் தென்பகுதியில், தட்சணாமூர்த்திக்கு தனி சன்னதி உள்ளது. கோவிலின் உட்பிரகாரத்தில் இடப்பக்கத்தில் நவகிரக சன்னதியும் உள்ளது. உட்பிரகாரத்தில் இடது பகுதியில் துர்கை மற்றும் சண்டிகேஸ்வரருக்கு சன்னதிகள் உள்ளன. சண்டிகேஸ்வரருக்கு பின்னால் உள்ள தீர்த்தம், சூலை தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சூலை தீர்த்தத்தை உட்கொண்டால், அணைத்து விதமான வயிறு சம்பந்தப்பட்ட நோய்களும் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. உட்பிரகாரத்தில் நிலைவாயிலின் அருகில் நடராஜருக்கும், சூரியனுக்கும் தனி சன்னதி உள்ளது. அதன் அருகில், பைரவர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

இத்திருத்தலத்தில் நடந்த அற்புதங்கள்

மருள்நீக்கியார் திருநாவுக்கரசர் ஆன திருத்தலம் 

திருவதிகை நகரில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவாமூர் என்ற  ஊரில் பிறந்த மருள்நீக்கியார், சமண சமயத்தில் மிகவும் தீவிர பக்தராக இருந்தார். அவரது தமக்கை திலகவதி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தங்கி, வீரட்டானேஸ்வரக்கு தொண்டு செய்து வந்தார். அந்த சமயத்தில், மருள்நீக்கியாருக்கு தீராத  சூலைநோய் (வயிற்றுவலி) ஆட்கொண்டது. சமண சமயத்தினர் வயிற்று வலியைப் போக்க எவ்வளவு  முயன்றும்  தீரவில்லை. திலகவதியாரின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த சன்னதிக்கு வந்து, இறைவனை வழிபட்டு, திருநீற்றைப் பூசி வாயிலும் இட்டுக்கொண்டார். உடனே வயிற்றுவலி தீர்ந்தது. அதன் பின்னர், மருள் நீக்கியார் திருநாவுக்கரசர் என்று பெயர் பெற்றார். எனவே, தேவாரம் இத்தலத்தில் இருந்து பாடத் தொடங்கினார். அதன்பின், சைவ சமயத்திற்கு பெருந்தொண்டு புரிந்தார். இக்கோவிலில், பிரார்த்தனை செய்பவர்களுக்கு தீராத வயிற்று வலி நோய் தீர்கிறது.

சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் புரிந்த திருத்தலம்

வித்யந்தமாலி, தாருகாட்சன், கமலாட்சன் ஆகிய மூன்று அசுரர்கள், முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் கோட்டை கட்டி வாழ்ந்து வந்தார்கள். இந்தக் கோட்டைகளுக்கு விமானம் போல் பறக்க சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு, இவர்கள் தேவர்களை துன்புறுத்தினர். தேவர்கள் அசுரர்களின் தொல்லை தாங்காமல், சிவபெருமானிடம்  சென்று முறையிட்டனர். எனவே, சிவபெருமான் மூன்று அசுரர்களையும் அழிக்க பூமியை தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய, சந்திரனை சக்கரங்களாக்கி, மற்ற எல்லா உலகப் படைப்புக்களையும், போர் புரிவதற்கான ஒரு ஆயுதமாக்கி புறப்பட்டார்.

அசுரர்கள் மூவரும் முன்னரே, ஈசனிடம் தங்களை அழிப்பதற்கு கட்டுப்பாடுகளை விதித்து, வரமாகப் பெற்றிருந்தனர். அவை, தங்களை அழிக்கும் போது அவர்களது மூன்று கோட்டைகளும் ஒரே இடத்தில் இருக்கவேண்டும் என்றும், தங்களை அழிக்கும் நேரம் பகலாகவோ அல்லது இரவாகவோ இருக்கக் கூடாது என்றும், மற்றும் அழிக்கும் சமயத்தில் சிவன் கோபம் கொள்ளக்கூடாது என்பவை ஆகும். 

திரிபுரவாதிகளுக்குக் கொடுத்த வரத்தினால், சிவபெருமான் போர் புரியும் போது, சினம் கொள்ளாது,  புன்னகை கொண்டு இருந்தார். இதைக் கண்ட அசுரர்கள், ஈசனுக்கு கோபம் வரவழைக்க வேண்டும் என்பதற்காக, ஈசனின் இடப்பக்கம் அமர்ந்திருந்த தேவியை தருமாறு கேட்டனர். சிவபெருமான் புன்னகைத்துக் கொண்டே, தேவியை நோக்கினார். கேட்ட வரத்தை கேட்டபடி கொடுத்துவிடும் சிவபெருமான், எங்கே தன்னையும் கொடுத்து விடுவாரோ என்று எண்ணி, தேவி ஈசனுக்கு வலப்புறம் வந்து விட்டார். தேவியைக் கேட்டவுடன் கோபம் கொண்ட ஈசன் சிரித்தார். 'சிரித்தேன் எரித்தேன்' என்று திரிபுர அசுரர்களையும் எரித்தார். திரிபுரங்களையும்  எரிக்கும் போது, தேவி ஈசனுக்கு வலப்புறம் வந்ததால், இக்கோவிலில் தேவிக்கு ஈசனின் வலப்புறம் சன்னதி இருக்கும்.

பிராத்தனைப் முறைகளும், பலன்களும்

இங்குள்ள ஈசனை வழிபடுவோருக்கு, உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயிருந்தாலும் தீருகிறது. எதிரிகளின் தொல்லை, சாப தோச நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் ஆகியவை  நீங்கும். குழந்தை இல்லாதவர்கள், ஈசனுக்கு அபிஷேகம் செய்த பாலை உட்கொண்டால்  குழந்தைப்பேறு உண்டாகும். குடும்ப ஐஸ்வரியம் கூடும். இங்குள்ள அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் நிவேதானம் செய்தால், திருமணமாகாதவர்களுக்கு திருமணத் தடை நீங்கி கூடிய விரைவில் திருமணம் நடைபெறுமாம்.

 இத்திருத்தலத்தில், ஐந்தாவது பிரகாரமாகக் கருதப்படும் ஆலயத்தை சுற்றியுள்ள மாடவீதி, கிரிவலப் பாதையாக உள்ளது. இந்த சுற்றப்பாதை 1 கீ.மி. தூரம் கொண்டது. இப்பாதையில், பௌர்ணமி அன்று பக்தர்கள் 16 முறை சுற்றி கிரிவலம் வருகிறார்கள். இவ்வாறு செய்வதால், கைலாய தரிசனம் பெற்ற பலனும், அருளும் ஜீவமுக்தி அடைந்த மகான்களின் ஆசியும் கிடைப்பதாக நம்பிக்கை.

Image result for thiruvathigai veerattaneswarar temple panruti
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில், திருவதிகை


வாழ்க வளமுடன்

Comments